விவசாய கடன் மானிய தொகையை ரூ.8 லட்சத்தை தனக்கு தெரிந்தவர்கள் கணக்கில் வரவு வைத்த அதிகாரி கைது..!

விவசாய கடன் மானிய தொகையை தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்த வைத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால், இவர் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமீபத்தில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதாவது பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

இந்த தணிக்கை செந்தில்குமார் ரூ.7,99,146 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தலைமை மேலாளர் ரமேஷ்பாபு ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.