வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக வாட்ஸ் ஆப் செயலியை விட வேகம், குறைந்த டேட்டா பயன்படுத்துவது, அதிக மெசேஜ் அனுப்ப முடியும் போன்ற வசதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதான் டெலிகிராம். இந்த டெலிகிராமில் பல ஜீபி பைல்களை எளிதாக அனுப்ப முடியும். அதனால் இதை மெசேஜிங் தளமாக பயன்படுத்துவது போய் பைரஸி தளமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பல்வேறு பைரஸி வெப்சைட்களை அடித்து நொறுக்கி இந்த தளம் பைரஸி வீடியோக்களில் முதலிடம் பிடித்து உள்ளது.
புதிதாக வெளியாகும் பெரும்பாலான படங்கள் எல்லாம் எளிதாக இந்த டெலிகிராமில்தான் வெளியாகிறது. ஏன் வெப் சீரிஸ் தொடர்கள் கூட டெலிகிராமில்தான் இலவசமாக வெளியாகிறது. இதை எல்லாம் தடுக்க முடியாமல் திரைத்துறை நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் திணறி வரும் அளவிற்கு டெலிகிராம் பயன்பாடு உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டெலிகிராமில் ஆபாச படங்களுக்கு என்றும் பல தளங்கள் உள்ளன. முக்கியமான விஷயம் டெலிகிராமில் வீடியோ விற்பனை செய்வது மிகப்பெரிய வியாபாரம் ஆகி உள்ளது. டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை, பெண்களை வீடியோ எடுத்து குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்வது, சிறுமிகள், பெண்கள் ஆகியோரின் பாலியல் வீடியோக்களை காசுக்கு விற்பது பெரிய தொழில் ஆகி உள்ளது.
இவ்வளவு பணம் கொடுத்தால் இந்த வீடியோ ஒன்று பெண்களின் வீடியோக்களை பலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் டெலிகிராமில் பல்வேறு குழுக்களில் இருக்கும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று தமிழ்நாடு காவல்துறையினர் மூலம் விடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த தமிழ் மாறன், ஈரோட்டை சேர்ந்த ஆர்யா என்ற இரண்டு இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஐடி ஊழியர்கள் ஆவர். இவர்கள் பொது இடங்களில் நிற்கும் பெண்களை புகைப்படம் எடுப்பது. வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை செய்துள்ளனர்.
இதை டெலிகிராமில் குழு தொடங்கி காசுக்கு விற்று உள்ளனர். ஆபாச கமெண்ட் செய்து, இந்த வீடியோக்களுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். வணிக வழக்கம், பல்பொருள் அங்காடி, மால்கள், பேருந்து நிலையங்களில் இருக்கும் பெண்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அதோடு ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அவர்களுடன் நட்பாகி, அவர்களுடன் நெருக்கமாகி இருப்பது போலவும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதை எல்லாம் டெலிகிராமில் காசுக்கு விற்று உள்ளனர். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்தான் பெண்களை புகைப்படம், வீடியோ எடுத்து ஆபாசமாக அதை இணையத்தில் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல் இது போன்ற குழுக்களில் மக்கள் இருக்க கூடாது. மீறி இருந்தால் குழுவில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.