வைஷ்ணவி: உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்.. என்னை வரவேற்பதும் என்னை தேற்றுகிறது…!

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது என தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது பாஜக என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில், என்னைப் போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் உங்களை போன்ற அனுபவம் மிக்கவர்களின் வழிகாட்டுதலோடு மக்கள் குரலாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது. நன்றி அண்ணா! என பதிவிட்டுள்ளார்.