இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பல நேரங்களில் வானில் ஏற்படும் பல மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை ஒரு முறை நாம் மிஸ் செய்தால் அதன் பிறகு இதைப் பார்க்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். அப்படியொரு ஆச்சரியமான நிகழ்வு தான் இப்போது நடக்க உள்ளது. இதை நீங்கள் மிஸ் செய்தால் மீண்டும் இதைப் பார்க்க 9 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டுமாம். நமது பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது பூமியில் இருந்து பல லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வருகிறது. இதற்கிடையே இந்த ஆகஸ்ட் மாதம் சந்திரன் மிகவும் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியுமாம்.
நேற்றைய தினம் நிலவைப் பார்த்திருந்தால் கவனித்திருக்கலாம். வானில் சூப்பர் மூன் (supermoon) தெரிந்திருக்கும். இதை மிஸ் செய்துவிட்டால் கவலைப்படாதீர்கள். இம்மாத இறுதியில் இதை விட அரிய நீல சூப்பர் மூன் தெரியுமாம். பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ.. அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது. இந்த நிகழ்வில் வழக்கத்தைக் காட்டிலும் நிலவு பெரிதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும்.
இந்த மாதம் முழுக்கவே நிலவு சற்று பெரிதாகவும் பிரகாசமாகவுமே தெரியும். இது வழக்கமான முழு நிலவைக் காட்டிலும் 8% பெரியதாகவும் 16% பிரகாசமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 3 அல்லது 4 முறை மட்டுமே பூமிக்கு நிலவுக்கு மிக அருகில் வரும். அதைத்தான் நாம் சூப்பர் மூன் என அழைக்கிறோம். இந்த சூப்பர் மூன் நிகழ்வு கடைசியாக ஜூலை 3-ம் தேதி நடந்தது. இந்தாண்டு மொத்தம் சூப்பர் மூன் நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வு இந்த மாதத்திலேயே நடக்குமாம்.
முதலாவது சூப்பர் மூன் நேற்று இரவு வந்துள்ள நிலையில், அடுத்து அரிதான சூப்பர் மூன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வர உள்ளது. இதை மிஸ் செய்தால் பிறகு மீண்டும் இதைக் காண 2032 வரை காத்திருக்க வேண்டும். “சூப்பர் மூன்” என்பது பூமிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது என்றால் நீல நிலவு எத்தனை முறை நிலவு நமது பூமியைச் சுற்றி வருகிறது என்பதைக் குறிக்கும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள் ஆகும். அதேநேரம் ஒரு காலண்டர் மாதத்தில் இரண்டாவது முறையாக முழு நிலவு இருக்கும் போது அதை நாம் நில நிலவு எனக் குறிப்பிடுகிறோம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வரும் போது அதை நாம் நீல நிலவு என்று குறிப்பிடுகிறோம்.
நீல நிலவு என்பது 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றாலும் கூட, சூப்பர் மூன் நிகழ்வின் போது இந்த நீல நிலவும் வருவது அதிசயம் தான். கடைசியாக டிசம்பர் 2009-ம் ஆண்டு தான் இந்த நீல சூப்பர் மூன் வந்துள்ளது. இப்போது மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி இது நிகழவுள்ளது. அன்றைய தினம் நிலவு மிகவும் பொரியாகவும் பிரகாசமானதாகவும் இருக்குமாம்.