உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.
இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.