ஜம்மு- காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்துடன் தமிழகம் நிற்க்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய கப்பல் படை அதிகாரி உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை அடுத்து ராணுவம், காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒருவேளை போர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட தயாராக இருந்தன.
இதற்கிடையே, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. சிந்தூர் என்றால் தாலி கட்டிய பின் பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்று அர்த்தம். பஹல்காம் தாக்குதலில் பல இளம் பெண்கள் தங்கள் துணையை இழந்த நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தியாவின் ஆபரேஷனுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காஷ்மீர் தாக்குதலை தொடர்புடைய ஜெய்ஸ் – இ – முகமது தலைமையகம் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாடு தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்துடன் நம் நாட்டுக்காக தமிழகம் உறுதியாக இருக்கிறது” என எக்ஸ் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.