அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்று இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.
டொனால்டு டிரம்ப் பேசுகையில்”கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம்.அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்” என தெரிவித்தார்.
மேலும் “கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.
நான் வித்தியாசமான ஆள், சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்” என டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடினார்.