கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக ஜானகிராமனும், துணை சேர்மனாக தேமுதிகவை சேர்ந்த ஜான்சிராணி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. மேலும் ஒப்பந்த பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கோட்லாம்பாக்கம், கரும்பூர், சாத்திப்பட்டு, அவியனூர், கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த பணிகளுக்கு கமிஷன் தொகையை அதிமுக சேர்மனுக்கு வழங்க நேற்று ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது சேர்மன் தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகள் தருவதாக பேரம் பேசினார்.
அதன்படி, லஞ்ச பணத்தை அதிமுக சேர்மனுக்கு வழங்கினர். இது சம்பந்தமாக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து அதிமுக சேர்மன் அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காவல்துறை கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சேர்மன் திணறினார். அவரது லாக்கரில் இருந்த லஞ்ச பணம் ரூ.3 லட்சத்து 9000-ஐ பறிமுதல் செய்தனர். அதிமுக சேர்மன் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.