ஐந்து தலைமுறைகள் கண்ட முதியவருக்கு 101-வது வயது பிறந்தநாள் கொண்டாடிய கொள்ளு பேரன் பேத்திகள்..!

சிட்டுக்குருவிகள் சிறு கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி, இரை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, தனது சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சந்தோஷமே தனி சுகமாகும். அதேபோல நம் மண்ணில் இன்பம், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு கூட்டுக் குடும்பங்கள் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக கொள்ளு தாத்தாவின் பிறந்தநாளை அனைத்து உறவுகளும் சங்கமித்து கொண்டாடும் சுகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு பல தலைமுறைகள் கடந்த பிறந்தநாள் தாராபுரத்தில் கொண்டாட பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வரும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ். அவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் பேரன் மற்றும் பேத்திகளுடன் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 101 வயது கோவிந்தராஜ் அவர்கள் தன்னுடைய பணிகளை இன்றும் தானே செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

தனது கொள்ளு பேரன் பேத்திகளுடன் கோவிந்தராஜ் ஒரு சிறு குழந்தையைப் போல அவர்களுடன் ஆடிப்பாடி விளையாடி தனது உறவினர்கள் உடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பேரன் பேத்திகள் என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இன்றுடன் தாத்தா கோவிந்தராஜிக்கு 101 வயது நிறைவடைவதை முன்னிட்டு அவரின் மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என 56 பேர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்கள் இணைந்து தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாத்தாவின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வெகு விமரிசையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.