இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், நமது மருத்துவர்கள் பல சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் சிறப்பாகச் செய்கிறார்கள். இதன் காரணமாகவே பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட மருத்துவச் சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார்கள். அதனால் தமிழ்நாட்டைத் தான் இந்தியாவின் மருத்துவ தலைநகர் என்பார்கள்.
சரி விஷயத்திற்கு வருவேன் கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த 48 வயதான நபருக்கு, சமீபத்தில் பிக்கிபேக் எனப்படும் ஹீட்டோரோடோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அவருக்கு இப்போது ஒரே நேரத்தில் இரண்டு துடிக்கும் இதயங்கள் உள்ளன. அதாவது மருத்துவர்கள் அவரது இதயத்தை அகற்றாமலேயே புதிய இதயத்தைப் பொருத்தியுள்ளனர். கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.
48 வயதான அந்த நோயாளிக்குக் கடந்த ஓராண்டாகவே பல்வேறு இதய பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் சிக்கல்களை எதிர்கொண்டு வந்து இருக்கிறார். கடந்த ஓராண்டில் அவருக்குப் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டென்டிங் சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான இதயத்துடன் ஒப்பிடுகையில் அவரது இதயம் வெறும் ஏழு சதவிகிதம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் பல் துலக்குவது போன்ற அன்றாட வேலைகளைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. மேலும் இதனால் அவரது நுரையீரல் செயல்பாடு கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர் பிரசாந்த் கூறுகையில், “அவருக்கு இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. பொருந்தமான டோனருக்காக நாங்கள் காத்திருந்தோம். இருப்பினும், அரசின் உறுப்பு மாற்று ஆணையம் மூலம் அவருக்கு இதயம் மட்டுமே கிடைத்தது. எனவே நாங்கள் ஹீட்டோரோடோபிக் இதய மாற்றுச் சிகிச்சையைச் செய்ய முடிவு செய்தோம்” என்றார். ஹீட்டோரோடோபிக் இதய மாற்று ஆப்ரேஷன் என்பது ஒரு அரிய அறுவை சிகிச்சை முறையாகும்.. நோயாளியின் இதயத்தை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு மாற்று இதயத்தைப் பொருத்துவதே இந்த ஹீட்டோரோடோபிக் இதய மாற்று அறுவை சிகிச்சையாகும்.
இதன் மூலம் அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு இதயம் செயலில் இருக்கும். அவருக்கு நுரையீரலும் தேவைப்படும் நிலையில், அது இப்போது கிடைக்கவில்லை. இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்திற்கு இரண்டு இதயங்கள் இருந்தால் அது நுரையீரலின் அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாக மருத்துவர் வைஜ்யநாத் தெரிவித்தார். மொத்தம் மூன்று மணி நேரம் நடந்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில் நோயாளி மார்பின் வலது பக்கத்தில் கொடையாளியின் இதயம் வைக்கப்பட்டது.
அதாவது இடது பக்கம் நோயாளியின் இதயம் இருக்கும் நிலையில், அதை அகற்றாமலேயே வலதுபுறம் கொடையாளியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்துடன் மருத்துவர்களுக்கான சவால் முடிந்துவிடவில்லை. இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிப்பதும் ரொம்பவே முக்கியமானது. இதனால் பேஸ்மேக்கர் சாதனத்தை வைத்து ஒரு வாரம் இதயத் துடிப்பை மெல்ல ஒரே நேரத்தில் துடிக்குமாறு செய்துள்ளனர். இப்போது பேஸ் மேக்கர் இல்லாமலேயே ஒரே நேரத்தில் இரண்டு இதயங்களும் ஒன்றாகத் துடிக்கிறது. ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.