இந்தியாவில் விமான சேவைகள் அதிக அளவில் இருந்தபோதிலும் விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது, விமானங்களை பழுது பார்ப்பது போன்ற மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆகையால், இந்தியா முழுவதும் விமான சேவைகளை விரிவுப்படுத்தி, மேம்படுத்துவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, அகமதாபாத் ஆகிய 8 சர்வதேச விமான நிலையங்களிலும் விமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், விமானத்தில் பழுதடைந்த உபகரணங்கள் நீக்கிவிட்டு, புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக, ‘மெயின்டனன்ஸ், ரிப்பேரிங் அண்டு ஆபரேஷன்’ எனப்படும் எம்ஆர்ஓ மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை விமான நிலைய வளாகத்துக்குள்,‘ஏப்ரான்’ எனப்படும் விமானங்கள் நிற்கும் இடத்திற்கு, பின் பகுதியில் இந்த எம்ஆர்ஓ மையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டது. ஆனால் அதற்கான இட வசதி அந்த பகுதியில் இல்லை. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலைய இயக்குனர், தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்கு பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி, 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்திற்கு அளித்துள்ள நிலத்தில், விமானங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக எம்ஆர்ஓ மையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம், டெல்லியை தலைமை இடமாகக் கொண்டுள்ள சவுரியா ஏரோ நாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம், இதற்கான ஒப்பந்தம் செய்தது. அதன்படி அந்த நிறுவனம், சென்னை விமான நிலையத்தில் எம்ஆர்ஓ மையத்தை அமைத்து, அடுத்த 15 ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் இந்த எம்ஆர்ஓ மையத்தை நிர்வகிப்பார்கள்.
அதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் பழுதடையும் விமானங்கள் உடனடியாக பழுது பார்க்கப்படும். குறிப்பாக வெளிநாட்டு விமானங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படும். பழுதடைந்த விமானங்கள் சில மணி நேரங்களில் சீர் செய்து மீண்டும் வானில் பறக்க தொடங்கும்.
இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்குவார்கள். மேலும் இந்த MRO மையம் சென்னை விமான நிலையத்தில் அமைவதால் பொறியாளர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இதுவரையில் எம்.ஆர்.ஓ. மையம் அமைக்கப்படவில்லை. சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால் இந்த பணி உடனடியாக தொடங்கவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் ஒருங்கிணைந்த சர்வதேச புதிய முனையம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரையில் எம்ஆர்ஓ மையம் அமைப்பதற்கான பணியை இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் தொடங்கவில்லை. இந்த மையம் சென்னை விமான நிலையத்தில் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் பழுதடைந்து விட்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
பழுதடைந்த ஸ்பேர் பார்ட்ஸ்கள், அந்த நாடுகளில் இருந்து வந்த பின்பே, பழுதடைந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான், சென்னை விமான நிலையத்தில் அனைத்து விமானங்களையும் உடனடியாக பழுது பார்ப்பதற்கான, MRO மையம் அமைப்பதற்காக 32,300 சதுர அடி நிலத்தை, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக வழங்கியது.
ஆனாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னை விமான நிலையத்தில் MRO மையம் தொடங்கப்படாமல், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் MRO மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாகவும், தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தை, விமான நிலைய மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.