கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியா..!?

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று இந்தியன் – அமெரிக்கன் நிதிதிரட்டும் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம்(AAPI), நேற்று அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு தருணத்தை ஏ.ஆர். ரஹ்மானுடன், உலகத்தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாடுங்கள்” என பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஏதுமிடவில்லை. என்றாலும், நிகழ்ச்சிக்கான பதிவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணைப்பை ஏஏபிஐ வழங்கியுள்ளது.

ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமெரிக்க அதிபருக்கான இந்தத் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஆதரித்தது. மேலும் நாடு முழுவதுமான காங்கிரஸ் மற்றும் பிற அரசு பதவிகளுக்கு போட்டியிடும் ஏஏபிஐ வேட்பாளர்களையும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.