ஆவடி, காவல்சேரி கிராமத்தில் அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது.
கோயம்புத்தூர் விளாங்குறிச்சி சேரன் மாநகர பகுதியை சேர்ந்த தனிஷ் சேவியர் ஆனந்தன், ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் கடந்த 26-ஆம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ஆவடி, காவல்சேரி கிராமத்தில் சொந்தமாக அட்டை கம்பெனி ஒன்றை மனைவி பெயரில் நடத்தினேன்.
அப்போது சென்னை நொளம்பூரைச் சேர்ந்த நண்பர் முத்துராஜ் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாக கூறியதால் கம்பெனியை பார்த்துக் கொள்ளுமாறு 2021 அக்டோபர் மாதம் அவரிடம் கூறினேன். முத்துராஜ் கம்பெனியை பார்த்துக்கொண்டு, மின்சார கட்டணம் மற்றும் சம்பளம் போக லாபத்தில் பாதி தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் மீதான நம்பிக்கையில் அக்ரிமெண்ட் பத்திரம் போடாமல் சம்மதம் தெரிவித்தேன்.
அதன்படி முத்துராஜ் 2022 முதல் மாதந்தோறும் ₹25,000 கொடுத்து வந்தார். ஆனால், நான் வாங்கி வைத்திருந்த இயந்திரங்களை பயன்படுத்தி முத்துராஜ் அவரது மனைவி முத்துலட்சுமி பெயரில் அதே இடத்தில் புதிதாக கம்பெனியை ஆரம்பித்து நடத்தினார். பிறகு முத்துலட்சுமியின் நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து கம்பெனிக்கு போலியாக வாடகை ஒப்பந்த பத்திரம், வாடகை ரசீது, தடையில்லா சான்று மற்றும் இயந்திரம் வாங்கியதாக போலி பில் போன்ற ஆவணங்களை உருவாக்கி, எனது கையெழுத்தையும் போலியாக போட்டு ஆவணம் தயார் செய்துள்ளனர்.
நவம்பர் 2021-ல் பூந்தமல்லி சரகத்தில் முத்துலட்சுமி பெயரில் ஜிஎஸ்டி பில் பெற்று, கோயம்பேடு ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மார்ச் 2022-ல் லோன் வாங்கியுள்ளனர். எனக்கு சொந்தமான இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் மாவட்ட அலுவலகத்தில் அரசு மானியம் பெற்றுள்ளனர். நான் 2023-ம் ஆண்டு வரவு செலவு கணக்கை பார்க்கச் சென்ற சமயம் எனக்கு தரவேண்டிய கம்பெனி வருமானத்தை தராமல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. என்னிடம் மொத்தம் ₹4 கோடி மோசடி செய்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த சென்னை நொளம்பூர் ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட்டை சேர்ந்த முத்துராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மதுரவாயல் ரெசிடென்சி அபார்ட்மெண்ட்டை சேர்ந்த கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.