வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, வங்கதேச அணிக்காக ஃபீல்டிங் செட் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணி வீரர்களுடன் ஜாலியாக உரையாடிய அவர், அப்படியே ஃபீல்டிங் செய்து ஆலோசனை கொடுத்துள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த 632 நாட்களுக்கு பின் முதல் முறையாக வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரசிகர்கள் ரிஷப் பண்ட் பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்ப 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி சதத்தை விளாசி இருக்கிறார்.
ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வந்தாலே, டவுன் தி ட்ராக் வந்து பவுலரின் தலைக்கு மேல் சிக்சர் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அரைசதத்தை 88 பந்துகளில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 36 பந்துகளில் சதத்தை எட்டி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 129 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை அளித்தனர். இதனிடையே பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் செய்த சம்பவம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனிடையே ட்ரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ ஃபீல்டிங்கை செட் செய்து கொண்டிருந்தார். அப்போது கவர்ஸ் திசையில் எந்த ஃபீல்டரும் இல்லாமல் இருப்பதை கவனித்த ரிஷப் பண்ட், உடனடியாக வங்கதேசம் கேப்டன் ஷான்டோவை “பையா” என்று அழைத்து இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்க.. ஒரு ஃபீல்டரை நிறுத்தலாம் என அறியுரை கூறினார்.
இதனை சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்ட ஷான்டோ உடனடியாக ஒரு ஃபீல்டரை கவர்ஸ் திசையில் நிறுத்தினார். இது போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. எதிரணி கேப்டனுக்கு கூட ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்குகிறார் என்று ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.