இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் கேப்டன் டீன் எல்கரின் (3 ரன்) விக்கெட்டை பறிகொடுத்து 17 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் (8 ரன்), கேஷவ் மகராஜ் (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இன்று 2- ஆம் நாள் ஆட்டத்தில் பீட்டர்சென் (72 ரன்கள்) தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 76.3 ஓவர்கள் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள்,முகம்மது ஷமி 3 விக்கெட்டுகள் மற்றும் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடதக்கது.