ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.
ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.