‘அடுத்த கேள்வி ப்ளீஸ்’ – ட்ரம்பை மனுசனா கூட மதிக்காத கமலா ஹாரிஸ்!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தில் பரபரப்பாக இருக்கின்றது. குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே பெரிய வார்த்தை போர் நடைபெற்று வருகின்றது . இந்நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “எனக்கு தெரிந்தவரை கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

இந்திய பாரம்பரியத்தை அவர் ஊக்குவித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்புதான் அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று எனக்குத் தெரியாது. ​​இப்போது அவர் கறுப்பினத்தவராக அறியப்பட வேண்டும் என விரும்புகிறார். அவர் இந்தியரா அல்லது கறுப்பினத்தை சேர்ந்தவரா? என்பது எனக்கு தெரியாது” என சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் என பேசி கமலா ஹாரிஸ் மீது ஒரு பெரிய இனவெறி தாக்குதலை தொடுத்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக இயங்கி வரும் கமலா ஹாரிஸ், முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மேலும், இதில் கொள்கை முடிவுகளை மாற்றிக் கொண்டது குறித்தும் விளக்கம் தந்துள்ளார்.

‘அரசியல் ஆதாயத்துக்காக கமலா ஹாரிஸ் ஆப்பிரிக்க அமெரிக்கராக மாறிவிட்டார்?’ என ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு “அதே பழைய மற்றும் சோர்வளிக்கும் விளையாட்டு” என கமலா ஹாரிஸ் தெரிவித்து இது தொடர்பாக மேலும் பேச விரும்பாத கமலா ஹாரிஸ் ,‘அடுத்த கேள்விக்கு போகலாம்’ என தெரிவித்தார்.

மேலும் பேசிய கமலா ஹாரிஸ், “நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அமெரிக்க மக்கள் புதிய பாதையில் முன் செல்ல விரும்புகிறார்கள் என என்னால் அறிய முடிகிறது. எனது கொள்கை சார்ந்த மிக முக்கியமான அம்சங்கள் மாறவில்லை என்றே நான் நினைக்கிறேன்” என கூறினார்.

இந்திய மாணவர்கள் கனடா அரசின் முடிவை எதிர்த்து போராட்டம்..!

கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக நேற்று முன் தினம் அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த முடிவு தங்களின் எதிர்காலக் கனவுகளுடன் கனடாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர்.

எனவே ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரின்ஸ் எட்வார்ட் மாகாணத்தில் உள்ள சட்டமன்ற கட்டடத்தின் வெளியே இந்திய மாணவர்கள் திரண்டு அரசின் இந்த திடீர் முடிவை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓன்டாரியோ, மானிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். ஒர்க் பெர்மிட்களின் கால அளவை அதிகரிப்பது, நிறைந்த குடியுரிமை கிடைப்பதற்கு சிக்கல் இல்லாத நடைமுறையை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அவர்கள் தங்களின் கோரிக்கைகளாக முன்வைத்து போராடி வருகின்றனர்.

Justin Trudeau: கனடா அரசு எடுத்த அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு ஆப்பா..!

கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.

தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தும் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறிக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

pavel durov: டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரியுடன் கைது செய்யப்பட்ட இளம்பெண் யார்?

90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ பவெல் துரோவ் டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். பவெல் துரோவ் கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ஜூலி வவிலோவாதுபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள்ளது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வவிலோவாவும், டெலிகிராம் சிஇஓவும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர்.

Volodymyr Zelenskyy: ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினர் போர் முடிவுக்கு வரும்..!

கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கி உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை. இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி அரசுமுறை பயணமாக போலந்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் நேற்று சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் அவரை உக்ரைனின் உயர்நிலை தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து மரின்ஸ்கி அரண்மனையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், பிரதமர் மோடியும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அந்த சந்திப்பு மிக நன்றாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக எனது கருத்துகளை முன்வைத்தேன். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை பல உலக நாடுகளும் நிறுத்திவிட்டன.

இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனை இந்தியா நிறுத்தினால் புதின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். புதினுடைய பொருளாதாரம் ஆயுதம் சார்ந்தது. அவருடைய கரங்களை இந்தியா, சீனா எண்ணெய் இறக்குமதி வலுவாக்கின்றன. அந்த வகையில் ரஷ்ய ஆயுதப்படையை பலப்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். இந்தியா நினைப்பதுபோல் புதின் இந்தியாவை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தகர்த்திருக்காது. இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும் என வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்..!

வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, வேலைகளில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் சர்ச்சைக்குரிய விவகாரம் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், 300 பேர் வரை பலியானார்கள். இதில், கடந்த 5-ந்தேதி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். அவர், பாதுகாப்புக்காக டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்து உள்ளார். இதன்பின்பும் போராட்டம் தீவிரமடைந்து, பலர் உயிரிழந்தனர். மொத்தத்தில் வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் பரவின என ஒருபுறம் தகவல் பரவியது. இதனால், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அந்நாட்டின் டாக்கா நகரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தகேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது.

‘அனைத்து மனிதர்களுக்கும் அன்னை’ என்ற பெயர் பெற்ற இந்த கோவிலுக்கு இந்து சமூக உறுப்பினர்கள் பலர் வருகை தருவது வழக்கம். இதன் அருகிலேயே பல மசூதிகளும் உள்ளன. இந்நிலையில், ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர், இந்த கோவிலை பாதுகாப்பதற்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதுபற்றி கோவிலின் முக்கிய பூசாரிகளில் ஒருவரான ஆஷிம் மைத்ரோ கூறும்போது, இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது புத்த மதத்தினர் என அனைத்து மனிதர்களுக்கும் அன்னையானவள் தாயாக இருக்கிறாள். அவர்கள் ஆறுதல், வளம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை பெறுவதற்காக வருகிறார்கள் என கூறியுள்ளார்.

இந்த கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது என்றார். ஹசீனா இந்தியாவுக்கு சென்று தஞ்சமடைந்தபோது, கோவிலிலேயே இருந்தேன் என்றும் கோவிலுக்கு யாரும் வரவில்லை என்றும் கோவில் கதவுகள், நுழைவு வாசலை அடைத்து விட்டு கோவில் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளே இருந்தனர் என்றும் காவல்துறையினர் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். அப்போது, உள்ளூர் சமூக மக்கள் உதவியாக இருந்தனர். கோவிலுக்கு வெளியே இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பலர் பாதுகாப்புக்காக காவலுக்கு நின்றனர். இதனால், கோவிலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. மேலும் தடையின்றி தினமும் பிரசாதமும் வழங்கப்படுகிறது என ஆஷிம் மைத்ரோ கூறியுள்ளார்.

Sreela Venkataratnam: டெஸ்லா ஓகே..! மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படும்..!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலான் மஸ்கின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Donald Trump: கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் மோசமான அதிபராக இருப்பார்..!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-அம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நிலையில், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நியூஜெர்சியில் கூறுகையில், ‘அவர் மீது எனக்கு மரியாதை இல்லை. அவரது திறமையின் மீதும் எனக்கும் திருப்தியில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் குறித்து தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். அவர் மீது எனக்கு மிகவும் கோபம் உள்ளது. நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுமொத்த நீதித்துறையும் எனக்கு எதிரான ஆயுதமாக தவறாக பயன்படுத்தினர். எனவே தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர் தான். கமலா ஹாரிஸின் கொள்கை மிகவும் விசித்திரமானது’ என டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிறை தண்டனை பெற்றவரை அமைச்சராக நியமித்ததால் பிரதமர் பதவி நீக்கம்..!

தாய்லாந்தில் நாட்டில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற ஸ்ரெத்தா தவிசின் அமைச்சரவையில் பிச்சித் என்ற வழக்கறிஞர் சேர்க்கப்பட்டார். இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சினின் உறவினர் ஆவார். இவர் கடந்த 2008-ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்புக்காக 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர். இதனால் இவரது நியமனத்தை எதிர்த்து முன்னாள் செனட் உறுப்பினர்கள் 40 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. இதில் பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்ய 5 நீதிபதிகள் ஓட்டளித்தனர். அவர்கள் கூறிய தீர்ப்பில், ‘‘அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித் ஒழுங்கீனம் காரணமாக சிறை தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்துள்ளார். இதன் மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

சீன மருத்துவத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முறை..! மனித நாக்கின் நிறத்தை வைத்து உடல் பிரச்சினைகளை 98% துல்லியமாக கணிக்கலாம்..!

மனித நாக்கின் நிறத்தை வைத்து கணினி வழிமுறையில் உடல் பிரச்சினைகளை 98% மிக துல்லியமாக கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதற்கான புதிய இமேஜிங் சிஸ்டத்தை வடிவ மைத்துள்ளன.

இதுகுறித்து இணைப் பேராசிரியர் அலி அல்-நாஜி கூறுகையில், மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீரிழிவு,பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன் கணிக்கலாம். இதற்காக, மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலையுடன் இணைந்து பிரத்யேகமான இமேஜிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது.

இதில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த முடிவுகளின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, ஆஸ்துமா, கல்லீரல், பித்தப்பை பிரச்சினை, பிற வாஸ்குலர் பாதிப்புகள், இரைப்பைகுடல் நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், கோவிட் ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். இதன் வாயிலாக அறியப்படும் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமானவையாக இருக்கும்.

பொதுவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு ஊதா நிறத்திலும், அடர்த்தியான வழுவழுப்பு பூச்சுடனும் காணப்படும். பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒருவருக்கு நாக்கு வெள்ளையாக இருந்தால் அது ரத்தசோகையை குறிக்கும். அதேநேரம், மிக ஆழமான சிவப்பு நிற நாக்கு கோவிட்டையும், வயலட்நிற நாக்கு வாஸ்குலர் அல்லது இரைப்பை அல்லது குடல் பிரச்சினை அல்லது ஆஸ்துமாவை குறிக்கும்.

நாக்கின் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றைக் கொண்டு உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிவது என்பது சீன மருத்துவத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முறை. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த ஏஐ கணினி பகுப்பாய்வு முறையும் உருவாக்கப்பட்டுள்ளது என அலி அல்-நாஜி தெரிவித்தார்.