ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராக தலீபான்கள் அறிவிப்பு!

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நேற்று பேசுகையில், ஆப்கானிஸ்தானில் அமையும் தலீபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலீபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

மேலும் வெளியுறவுத் துறை துணை அமைச்சராக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார். அரசை நடத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த மந்திரிசபை அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் // பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயலதிகாரி டேவிட் பீஸ்லியை இஸ்லாமாபாதில் சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக நாடுகள் தலிபான்களுடன் ஆக்கபூா்வமான நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளை அளிக்க முடியும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகும், அந்த நாட்டுடன் சா்வதேச நாடுகள் உறவைப் பேண வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுவதற்கு சா்வதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நீடித்திருக்க வேண்டுமென்றால், புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகள் குறித்து சா்வதேச சமுதாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள 30 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மீண்டும் வெளியேறுவதற்கான சூழலை சா்வதேச நாடுகள் ஏற்படுத்திவிடக் கூடாது என ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.

 

வடகொரியா பொருளாதார நெருக்கடியால் ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வட கொரியா துரிதமாகச் செயல்பட்டு எல்லைகளை மூடி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி மக்களை முடக்கியது. அதன் காரணமாக, 2020-ன் முற்பகுதியில் வட கொரியா கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையைச் சிரமமின்றி சமாளித்தது.

ஆனால், 2020-ன் பிற்பகுதியில் கிம் ஜாங் உன்-னின் தற்காப்பு நடவடிக்கைகளை மீறி நோய்த்தொற்று பரவல் வட கொரியாவில் தீவிரமடைந்தது. அதன் விளைவாக, வட கொரிய அரசு பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது, விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவது மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிப்பது எனக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணத்தால் வட கொரியா வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஏற்கனவே, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நிலைகுலைந்து நின்ற அந்நாடு கூடுதலாக இயற்கை பேரிடர் மற்றும் பொருளாதார பாதிப்பால் கலங்கிப்போனது. அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட கொரியாவில் கடும் பட்டினியும் பஞ்சமும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணுசக்தி திட்டத்தின் காரணமாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசமாகி விட்டதாலும் தற்போது அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் கடும் தட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பொதுவெளியில் தலைகாட்டத் துவங்கியிருக்கும் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு உயர் மட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடுமையாக குற்றம்சாட்டினார். வெறும் எச்சரிக்கையோடு விட்டுவிடாமல் மக்களின் பசிக்கும், பட்டினிக்கும், கொரோனா உயிரிழப்புகளுக்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன.

இலங்கை தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் ஓவியங்களை வரைந்து நூதன போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, கென்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 117 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீதான குற்றத்துக்கு தண்டனை காலம் முடிந்தாலும் அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முகாமிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று 20-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், `அப்பா’ என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தும், வாசகங்களை எழுதியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபுதாபியில் அறிமுகம்: முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொரோனா பரிசோதனை

ஒருவரின் உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும். இந்த முறையில் சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்படுகிறது. அந்த ரேடாரின் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படுகிறது.

அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் போதும். ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும். அதாவது கொரோனா தொற்று இல்லை என்றால் ஸ்கேன் செய்யும்போது அதில் பச்சை நிறத்தில் ஒளிரும். கொரோனா தொற்று உள்ளது என்றால் சிவப்பு நிறத்தில் ஒளிரும்.

அவ்வாறு சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும்.இந்த நவீன முகத்தை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் முறை நேற்று அபுதாபியில் உள்ள வணிக வளாகங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் முதல் அமலுக்கு வந்தது.

‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத்தலைவர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பிரபல ஜனநாயக ஆதரவு செய்தித்தாளான ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத்தலைவர் ஜிம்மி லேயை ஹாங்காங் காவல்துறை கைது செய்தனர். மேலும், அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஹாங்காங் நிர்வாகம் எடுத்தது. ஆப்பிள் டெய்லி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

வடகொரியா அறிக்கை: நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு


வடகொரியா, தங்கள் நாட்டில் கடந்த 10-ந் தேதி வரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

கே.பி. சர்மா ஒலி: யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது, யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசுகையில், யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என தெரிவித்தார்.

பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்கு காரணம்

கடந்த ஜூன் 20 அன்று எச்.பி.ஓவில் ஒளிபரப்பப்பட்ட ஆக்ஸியோஸின் பத்திரிகையாளர் ஜொனாதன் ஸ்வானுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அளித்த பேட்டியில், ஒரு பெண்ணின் உடைகள் பாலியல் வன்முறையைத் தூண்ட முடியுமா என்ற ஸ்வான் கேள்விக்கு


இது நீங்கள் வாழும் சமுதாயத்தைப் பொறுத்தது. ஒரு சமூகத்தில் மக்கள் அந்த மாதிரியான விஷயங்களைக் காணவில்லை என்றால், அது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களைப் போன்ற ஒரு சமூகத்தில் நீங்கள் வளர்ந்தால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவித்தார்.

கே.பி. சர்மா ஒலி: ராமரும் சிதையும் நேபாளத்தில் பிறந்தவர்

காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசுகையில், நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம்.

நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது என தெரிவித்தார்.