மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இந்தியா காரணமா..!?

இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பர்மா’ என்ற பெயரில் உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழிப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்.” என நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள கட்டிடங்கள் குலுங்கின. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு .8 ரிக்டர் அளவில் மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், வங்கதேசம், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன. தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது.

இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

ஒரே நொடியில் சீட்டு கட்டு போல மொத்தமாக சரிந்த அடுக்குமாடி கட்டிடம்..!

ஒரே நொடியில் சீட்டு கட்டு போல மொத்தமாக சரிந்த அடுக்குமாடி கட்டிடங்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு வலிமையான நிலநடுக்கங்கள் பதிவானது. அந்நாட்டில் சமீப ஆண்டுகளில் பதிவானதிலேயே இதுதான் வலிமையானது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்குப் பூகம்பத்தால் ஒரு மாபெரும் கட்டிடம் நொடிகளில் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

இப்போது, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11.50 மணியளவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டார் அளவில் 7.7ஆகப் பதிவாகியிருந்தது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சப்பட்டு ரோட்டிற்கு ஓடி வந்தனர். 2 பயங்கர பூகம்பங்கள் முதலாவது நிலநடுக்கம் தாக்கிய அடுத்த சில நொடிகளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தின் மையப்பகுதி சாகைங் அருகே அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கி வரை வலுவாகவே உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட இந்த பூகம்பம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் மியான்மர் நாட்டில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், மேலும் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் வீடியோக்கள் இதற்கிடையே பூகம்பம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை உணர்த்தும் வகையிலான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு: அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை விலையில் ‘தங்க அட்டை’

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார்.

அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி: “மோடி, டிரம்ப் செயல்கள் ஜனநாயக அச்சுறுத்தல்…?”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே போன்ற தலைவர்கள் சர்வதேச அளவில் பழமைவாத இயக்கத்தை உருவாக்கி வழிநடத்துகிறார்கள் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வலதுசாரி அரசுகள் அமைந்து வருகின்றன. வலதுசாரி சித்தாந்தம் கொண்ட தலைவர்களை மக்கள் பிரதமர்களாகவும் அதிபர்களாகவும் தேர்வு செய்து வருகிறார்கள்.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இதில் தவறு எதுவும் இல்லை என்ற போதிலும், இடதுசாரிகள் இதைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். வலதுசாரி தலைவர்கள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவதாகவும் இதைப் பிரச்சினையை உருவாக்கும் எனக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இது தொடர்பாகப் பதிலடி கொடுத்துள்ளார். சர்வதேச அளவில் இடதுசாரி தலைவர்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பதாகவும், தன்னை போன்ற வலதுசாரி தலைவர்கள் மீது திட்டமிட்டு பொய்களைப் பரப்ப முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே போன்ற தலைவர்கள் சர்வதேச அளவில் பழமைவாத இயக்கத்தை உருவாக்கி வழி நடத்துகிறார்கள் என ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். மேலும், உலகம் வலதுசாரி தலைவர்கள் தேசிய நலன்கள் மற்றும் தங்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசும்போது,​​ அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று இடதுசாரிகள் சொல்வது மிகவும் தவறான போக்கு என்றும் ஜியோர்ஜியா மெலோனி சாடினார்.

இடதுசாரிகளின் பொய்களை உலகம் இனி நம்புவதில்லை என்றும் தேசியவாத தலைவர்கள் மீது இடதுசாரிகள் முன்வைக்கும் பொய்கள் இனியும் பலன் தராது என விமர்சித்தார். ஜியோர்ஜியா மெலோனி மேலும் பேசுகையில், “டிரம்பின் தலைமை மற்றும் ஸ்டைல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. டிரம்ப் உட்பட வலதுசாரி தலைவர்களின் எழுச்சி இடதுசாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களை எரிச்சலடைய செய்து கோபத்தை ஏற்படுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள பழமைவாத தலைவர்கள் சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது இடதுசாரிகளுக்குப் பிடிப்பதில்லை. ஜனநாயக அச்சுறுத்தலா 90-களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரும் உலக இடதுசாரி தாராளவாத கட்டமைப்பை உருவாக்கினர். அப்போது அவர்களைச் சிறந்த அரசியல்வாதிகள் எனச் சொன்னார்கள்.

ஆனால், இன்று அதையே நான், டிரம்ப், மோடி உள்ளிட்டோர் பேசுகிறார்கள். ஆனால், அது ஜனநாயக விரோதம், ஜனநாயக அச்சுறுத்தல் என்கிறார்கள்.. இது இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. என்ன செய்ய வேண்டும்? இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோத குடியேற்றம் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

அதைத் தடுக்க டிரம்ப் அல்லது மோடியைப் போலக் கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும். அதுதான் எங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும். எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கும். அதேநேரம் இந்த போராட்டத்தில் நான் தனித்து இல்லை என்பது எனக்குத் தெரியும். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதுவே இடதுசாரிகளை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது” என ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார்.

மகா கும்பமேளாவில் நீராடினோமா, போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஐஐடி பாபா தேவையா இது ..?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடையும் என்றும், விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று கணிப்பை வெளியிட்ட ஐஐடி பாபாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஐசிசி தொடரில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருவதால், ரசிகர்களும் இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக இருந்தனர். ஏற்கனவே 2024 T 20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்றும், ஹர்திக் பாண்டியா மீது ரோஹித் சர்மா நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சரியாக கணித்து இருந்தார். இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஐஐடி பாபா சரியாக கணித்துள்ளாரா என்பதை பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.

இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு ஐஐடி பாபா தனது கணிப்பை கூறி இருந்தார். அதில், போட்டி நடப்பதற்கு முன்பாகவே கூறிவிடுகிறேன்.. இந்திய அணி நிச்சயம் வெல்லாது. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது. இந்தியா ஜெய்க்காது என்று சொல்லிவிட்டேன். அதனால் இனி இந்திய அணி வெல்லப் போவதில்லை. நீங்கள் என்ன கடவுளை விட பெரியவரா? என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஐஐடி பாபாவின் பதில் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஐடி பாபா என்கிற அபே சிங் மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கனடாவில் பணியாற்றி வந்தவர். திடீரென மிகப்பெரிய ஊதியம் பெற்று வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு பாபாவாக மாறியவர். இந்நிலையில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.

விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று ஐஐடி பாபா கூறிய நிலையில், சேஸிங்கில் கிங் விராட் கோலி முன் நின்று சதம் விளாசினார். இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐஐடி பாபாவை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர். மகா கும்பமேளாவில் நீராடினோமா, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி கிரிக்கெட் பக்கம் வந்து அவமானப்பட வேண்டும் என்று ஐஐடி பாபாவை ரசிகர்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.

தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப்.. !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்த காரணத்தால் அமெரிக்காவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக 2025 ஜனவரி 20-ஆம் தேதி 78 வயதான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து பதவியேற்றத்தில் இருந்த பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து அமெரிக்காவிற்கு சூனியம் வைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரிகளையும், சீனா மீது 10 சதவீதம் வரியையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 1 – ஆம் தேதி அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது. அமெரிக்கா மீது 25% வரிகளை கனடா விதித்து உள்ளது.

அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது. அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.

இந்த கூடுதல் வரியை பொதுவாக அந்த நாடுகள் செலுத்தாது. இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட டீலர்கள் விற்பனை விலையை அதிகரிப்பார். இதனால் பொருட்களின் விலை உயரும். மெக்சிகோ மற்றும் கனடா இதனால் எப்படி நேரடியாக பாதிக்கப்படும் என்ற கேள்வி எழலாம். நேரடியாக மெக்சிகோ மற்றும் கனடா இதனால் பாதிக்காது. கூடுதல் வரியால் மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களை வாங்க டீலர்கள் யோசிப்பார்கள்.

அதனால் அதன் மவுசு குறையும். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதை இறக்குமதி செய்யும் அமெரிக்கர்கள்தான். அவர்கள்தான் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்கும். அதிலும் சீனாவின் சில பொருட்கள் இல்லாமல் அமெரிக்காவில் வியாபாரமே நடக்காது. அதை எப்படி இருந்தாலும் அமெரிக்க டீலர்ஸ் அதிக வரி தந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும். இதைத்தான் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்கர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த சீனாவின் ‘DeepSeek’..!

ஜெமினி, சாட்ஜிபிடி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் டீப்சீக் (DeepSeek) பக்கம் திரும்பியுள்ளது. டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆனாலும் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், AI -க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தன்னுடைய வகுப்பு தோழர்களுடன் இணைந்து லியாங் 2008-ஆம் ஆண்டு உள்நாட்டு பங்குகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார். வெளிநாட்டு அனுபவங்கள் இல்லாத அவர்கள், பல்வேறு உத்திகளைப் பரிசோதித்த பிறகு, 2015-ல் ஹை-ஃப்ளையர் தளத்தை தொடங்கினர்.

2016-ஆம் ஆண்டு அதனுடன் இயந்திர கற்றலை (மெஷின் லேர்னிங்) இணைத்தனர். இது புதிய காரணிகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவியது. 2018-ஆம் ஆண்டு வாக்கில், இயந்திர கற்றல் அவர்களின் தயாரிப்புகளில் முழுமையாக இணைக்கப்பட்டது. 2023-ல், ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கை பொது நுண்ணறிவு ஆய்வகத்தை ஹை-ஃப்ளையர் தொடங்கியது. அதே ஆண்டில் ஹை-ஃப்ளையரை பிரதான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கொண்டு, அந்த ஆய்வகம் டீப்சீக் ஆக மாறியது.

AI உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் டீப்சீக் பிடித்துள்ளது. பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் AI -யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட AI முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன.

இதில் டீப்சீக்-வி3 தற்போது பரவலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதன் எதிர் விளைவுதான் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்க காரணம். இது அமெரிக்க டெக் வல்லுநர்களின் பாராட்டினை பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் டீப்சீக்-வி3 பொது பயன்பாட்டுக்கு வெளியானது. கடந்த 8-ஆம் தேதி இந்தியாவிலும், 10-ஆம் தேதி அமெரிக்காவிலும் இது அறிமுகமானது. வலைதளம் மற்றும் செயலி வடிவில் இதனை பயனர்கள் பயன்படுத்தலாம்.

தமிழ் மொழியிலும் இதை பயன்படுத்த முடியும். கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் டீப்சீக் AI தருகிறது. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14.8 டிரில்லியன் டோக்கன்களின் டேட்டா செட்களை வெறும் 55 நாட்களில் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை..! பெரியாருக்கு எதிராக பிரபாகரன் முன்னிறுத்தி விவாதிப்பதை சீமான் நிறுத்த வேண்டும்..!

பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எமது போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம். இது தொடர்பாக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக் குறைவாக பேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று. தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள். தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும் என ஈழப் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்..!

உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவை கடந்த திங்கள் கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்கா தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா இந்த நிதியுதவியை விரைவாக நிறுத்த உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை எதிர்த்து போட்டியிட்ட படட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தனது முதல் உரையில், “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன்.

நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும்.

இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய, அதே நேரம் அமெரிக்க எல்லைகளை மிக முக்கியமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க மறுக்கும் ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது.

எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்று இருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” என டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.