நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன. அதன் 25 முக்கிய அம்சங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடிகொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் 5 நீதியும் அதன் 25 வாக்குறுதிகளும் பத்து வருட அநீதிக்குப் பின்னர், இந்திய மக்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல்.
இந்த உத்தரவாதங்களால் அச்சம் அடைந்துள்ள பிரதமர் மோடி, தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ஆதாரமற்ற விஷயங்களை தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் பொய்களால் இந்திய மக்கள் சோர்வடைந்துள்ளனர். ஜூன் 4ம் தேதிக்குப் பின்னர் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்லப்போகிறார். இது இந்திய மக்களின் உத்தரவாதம்” என தெரிவித்துள்ளார்.