குரு பரசுராமன் அந்தணர்களுக்கு மட்டும் தான் வில்வித்தையை கற்றுத் தருவேன் என்ற வைராக்கியத்தில் இருந்தபோது, ஷத்ரியனான கர்ணன் தான் அந்தணர் என பொய் உரைத்து வில் வித்தை கற்றுக் கொண்ட சமயம், ஒரு நாள் பரசுராமன், கர்ணனின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது வண்டு ஒன்று கர்ணனின் தொடையை துளைத்துக் கொண்டு மறுபகுதியில் வர, குரு பரசுராமரின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டார்.
ஆனால் கர்ணனின் தொடையில் இருந்து வந்த ரத்தம் பரசுராமன் மீது பட விழித்தெழுந்த பரசுராமன், இத்தனை வலியைப் பொறுத்துக் கொண்ட கர்ணன், அந்தணன் இல்லை என அறிந்து “நீ கற்ற பிரமாஸ்திரம் வித்தை உனக்கு தகுந்த சமயத்தில் மறந்து போகட்டும்” என்று சாபம் அளிக்கும் தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிராமிணர்கள் மற்றும் உயர் ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையில் இருந்த நம் நாடு பல போராட்டங்களை கடந்து இன்று வீடு தேடி கல்வி என்ற நிலை வந்துள்ளது.
ஜாதி இழிவை போக்கி மனித வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வர கல்வி ஒன்றே ஆயுதம் என உணர்ந்து ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கல்வி மற்றும் ஆன்மீக கருத்துக்களை மக்களிடையே வேரூன்றச் செய்யும் நோக்கில் 1930 ஆம் ஆண்டு தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரால் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு மாணவரை கொண்டு இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம் உருவாக்கபட்டு அனைத்து ஜாதியினருக்கும் கல்வி என்ற சமத்துவ விதையை விதைத்தனர்.
அதன்பின்னர் பல சமூக சிந்தனையாளர்கள் சுயநலமில்லாது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் நில புலன்களை கல்வி கூடங்கள் அமைக்க கொடுத்தனர். ஒரு நாடு உலக அரங்கில் மதிக்கப் படுகின்றது என்றால் அதற்கு முதன்மையான காரணம் அந்த நாட்டின் கற்றவர்களின் அளவை பொறுத்தே. அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் காமராஜர் காலத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கும் போது நாட்டு மக்களிடையே சமத்துவம் வேண்டும் என்பதற்காக ஒரே முறை கல்வியுடன் உடை, செருப்பு, மதிய உணவு என எல்லோருக்கும் சமாக வழங்கபட்டது.
ஆனால், நாட்டில் அமல்படுத்தபட்ட தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு, ஆங்கில வழி கல்வி ஒன்றே வேலை வாய்ப்புகளை பெற்று பணம், காசு சம்பாதிக்க ஒரே வழி என்ற பிரச்சாரம் மக்களிடம் மிக வேகமாக பரவியது. இதன்விளைவாக அரசியல்வாதிகளுக்கு தேர்தல் பொது கூட்டங்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் சாராய வியாபாரிகள் தாங்கள் சாராயம் விற்று சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஆங்கில வழி கல்வியை உருவாக்கினர்.
அதுவரை தமிழ்நாட்டில் நடந்தோ அல்லது மிதிவண்டிகளிலோ பள்ளிக்கு தபால் பெட்டி டிரவுசர் மற்றும் போத்தன் பிய்ந்த சட்டையில் சென்ற நிலைமாறி தினமும் சூ அணிந்து, டை கட்டிய புற தோற்றங்களில் மாணவர்கள் மினுக்கிட பள்ளி பேருந்துகள் மாணவர்களை வீட்டு வாசலுக்கே வந்து அழைத்து செல்ல கல்வியானது சமத்துவ பாதையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற தொடங்கியது.
தனியார் பெரும் முதலைகள் மூலைக்கு மூலை கல்வி கூடங்களை அமைக்க அரசும் போதாக்குறைக்கு கல்வி கடனை வாரி கொடுத்தது மட்டுமின்றி ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் “ஆல் பாஸ்” என்ற சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் அரசு பாட திட்டம் மற்றும் மெட்ரிக் பாட திட்டம் என்று பத்தாம் வகுப்பு வரைக்கும் தனித்தனியாக இருந்ததை சமச்சீர் கல்வி என அமல்படுத்த பட்டதோ அன்று முதல் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி கிடைக்காவிட்டாலும் தனியார் கல்வி வள்ளல்களின் கஜானாக்கள் நிரம்பி வழிந்தது.
அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகள் எதற்கு எடுத்தாலும் நுழைவு தேர்வை கொண்டுவர காசு இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக தனியார் கல்விசாலை நோக்கி நடை போட ஆரம்பித்தனர். இந்நிலையில் வாழ்க்கை வாழ்வதற்குள் தினம் தினம் செத்து பிழைக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தாங்கள் தான் படிக்காமல் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.
ஆகையால், தங்களின் குழந்தைகளின் எதிர் காலமாவது நன்றாக இருக்கட்டும் என்ற ஆயிரமாயிரம் கனவுகளுடன் ஊரை சுற்றியும் கடனை வாங்கி எங்கு நல்ல கல்வி கிடைக்குமோ அங்கே அதாவது ஊரு விட்டு ஊரு மட்டுமல்லாது நாடு விட்டு நாடு கூட ( யாருமில்லாத அனாதைகளாக) கல்வி நிறுவனங்களை மட்டுமே நம்பி தங்களின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக கல்வி கற்க அனுப்புகின்றனர்.
ஆனால் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்த ஐஐடி பெண்கள் விடுதியில் தங்கி இருந்த அவர் கடந்த 2019, நவம்பர் மாதம் தனது மரணத்திற்கு ஆசிரியர் சுதர்சனம் பத்மநாபன் தான் காரணம் என செல்போனில் குறிப்பு எழுதிவிட்டு தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், ” எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை.
அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என தெரிவித்து மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் ” என்று புகார் கொடுக்க காவல்துறை நடந்தவற்றை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட பின்னர் பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமானது. இதே போல அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏரியில் இருந்து 21 வயது இந்திய வம்சாவளி மாணவி சடலமாக மிதந்தார். அவ்வப்போது உள்ளூர், வெளிநாடு என மாணவ, மாணவிகளின் மரணம் தொடர அதன் மர்மங்களும் தொடர்ந்து கொண்டே சென்று கொண்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வன்னயம்மாதேவி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேந்திரன் என்ற மாணவன் தாராபுரம் மகாராணி கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மகேந்திரனுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கொடுக்க பெற்றோர் பதறியடித்து ஓடி வந்தனர்.
ஆனால் ஓடோடி வந்த பெற்றோருக்கு பேரிடியாக தன் மகனை பிணமாக காட்டியது மகாராணி கல்லூரி. அதுமட்டுமின்றி மாணவனின் பெற்றோர் வருவதற்குள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற மகாராணி கல்லூரி காவல்துறையின் துணையுடன் மகேந்திரன் கல்லூரி சக மாணவர்களுடன் வெளியே செல்வதாக கூறி அமராவதி ஆற்றில் குளிக்க சென்றதாகவும் திடீரென நீரில் மூழ்கினார்.
உடனே சக மாணவர்கள் மகேந்திரனை தேடி மீட்டு தனியார் ஆம்லென்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்ததாகவும் அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த போது மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்க, ஆனால் மகாராணி கல்லூரி சார்பாக நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் தருவதாக காவல் நிலையத்தில் சமாதானம் பேசப்பட்டுள்ளது.
ஊரை சுற்றியும் பல லட்சங்களை கடனை வாங்கி படிக்க வைத்த பெற்றோர், செய்வதறியாது திகைக்க வழி செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்து உடலை எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யுமாறு தெரிவித்தது மட்டுமின்றி அடக்கம் செய்து விட்டு வந்து ரூ. 5 லட்சம் பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மாணவனின் பெற்றோர் ஆத்தூருக்கும் தாராபுரம் காவல் நிலையம் மற்றும் மகாராணி கல்லூரிக்கும் நான்கு மாதங்களாக கால்கடுக்க நடந்தது தான் மிச்சம். ஆனால் பணம் வந்ததாக தெரியவில்லை ஒரு கட்டத்தில் உன்னுடைய மகனுக்கு பணமெல்லாம் கொடுக்க முடியாது என மிரட்டப்பட்டுள்ளதாக்க தகவல்கள் கசிகின்றது.
இந்நிலையில் மாணவன் மகேந்திரனின் பெற்றோர் தரப்பில் தாராபுரம் கோட்டாச்சியர் குமரேசனிடம் தனக்கு நடந்த அநீதி குறித்தும் தன்னுடைய மகன் மகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதி விசாரணை வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால் கோட்டாச்சியர் குமரேசன் அவர்கள் நீங்கள் காவல் நிலையத்தில் வைத்து சமரசம் பேசி முடித்து விட்டீர்கள் இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவிப்பது போல தெரிகிறது.
பெற்றோரின் வயதான காலத்தில் தன் பிள்ளை படித்து வந்து நல்ல வேலைக்கு சென்று அவர்களின் அரை ஜான் வயிற்றிற்கு கஞ்சி ஊற்றுவான் என்ற ஆயிரம் கனவுகளில் பல லட்சம் கடனை வாங்கி படிக்க வைத்தால் படிக்க செல்லும் இடத்தில் ஒரு சில மாணவர்கள் ஏதோ காரணத்தால் மரணம் அடைந்தால் அதை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்லி அவரவருக்கு சேரவேண்டியதை பெற்று கொண்டு பெற்றோரை நடு தெருவில் அனாதைகளாக நிறுத்துவது மட்டுமின்றி அவர்களின் கடைசி காலத்தில் பிள்ளைகளின் ஏக்கத்துடன் பிச்சை எடுக்க வைக்கிறார்கள் இல்லை என்றால் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.
இது போன்ற சம்பவங்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலை முடுக்கில் விடை தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் தொடராமல் இருக்க அரசு தலையிட்டு தாராபுரம் மகாராணி கல்லுாரி மாணவன் மகேந்திரன் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளி கொண்டு வருமா..? இல்லை ஏகலைவனுக்கு வித்தையை கற்று கொடுத்த காரணத்தினால் துரோணாச்சாரியார், ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி வாங்கிய புராண கதைகளை போல கல்வி நிறுவனங்கள் ஆங்காங்கே மர்ம முறையில் மாணவர்களின் உயிரை பலி வாங்க அரசு வேடிக்கை பார்த்து கொண்டே இருக்குமா…?