நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சூவிழிராஜாவிற்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளரிடம் மனு கொடுத்தார்.

சூவிழிராஜா மனு கொடுத்து ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் வருவாய் ஆய்வாளர் காலம் தாழ்த்தி வந்தால், இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் விசாரித்தார்.  அதற்கு வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே நிலத்தை உடனடியாக அளவீடு செய்து கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்க, லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர்.