ICC T 20 World Cup : இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பை திருவிழாவை வெற்றியுடன் தொடங்குமா…!?

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடும் நிலையில், உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் போட்டி உட்பட இந்திய அணியை, பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே இல்லை. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. அணி தலைவர் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், பஹார் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் வரிசை உள்ளனர். மேலும் ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி இருவரும் பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி (தலைவர்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி.

பாகிஸ்தான் உத்தேச அணி: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), சோயிப் மாலிக், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், ஆசிப் அலி, ஹசன் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், ஷாகின் ஷா அப்ரிடி.