சச்சின் டெண்டுல்கர் உள்பட வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துகளைக் குவித்த 91 நாடுகளின் பிரபலங்களின் பெயர்கள் வெளியீடு

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன. வெளியிட்ட அறிக்கையில், பாப் பாடகர் திவா சகிரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா சிஃபர் ஆகியோர் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிக் கொணர்ந்துள்ளது. மேலும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஜோர்டான் நாட்டின் அரசர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், உக்ரைன் அதிபர், செக் குடியரசின் பிரதமர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.