கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி நேற்றைய முதல் நாள் முதல் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், ராமபட்டிணம் உள்வட்டத்துக்கு உட்பட்ட புரவிபாளையம், சேர்வக்காரன்பாளையம், வடக்கிப்பாளையம், தேவம்பாடி, ராமபட்டிணம், மண்ணுார், குமாரபாளையம், திம்மங்குத்து, நல்லுாத்துக்குளி, அய்யம்பாளையம், ஜமீன் முத்துார், தாளக்கரை, போடிபாளையம், ராசிசெட்டிபாளையம், குளத்துார் பகுதி மக்கள் ஜமாபந்தியில் பங்கேற்றனர்.
ஜமாபந்தியில், நில அளவு, முதியோர் உதவித்தொகை, விதவைச்சான்று, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உபகரணம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 115 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மூன்று பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்கள், இரண்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்கள் என மொத்தம், ஐந்து பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வழங்கினார். ஜமாபந்தியில் வழங்கப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள, அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மரக்கன்றுகளை நடவு செய்தார். அதன்பின், கிராம நில அளவை கம்பிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வாசுதேவன், நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.