டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு: அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை விலையில் ‘தங்க அட்டை’

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார்.

அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.