சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடையும் என்றும், விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று கணிப்பை வெளியிட்ட ஐஐடி பாபாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஐசிசி தொடரில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருவதால், ரசிகர்களும் இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக இருந்தனர். ஏற்கனவே 2024 T 20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்றும், ஹர்திக் பாண்டியா மீது ரோஹித் சர்மா நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சரியாக கணித்து இருந்தார். இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஐஐடி பாபா சரியாக கணித்துள்ளாரா என்பதை பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.
இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு ஐஐடி பாபா தனது கணிப்பை கூறி இருந்தார். அதில், போட்டி நடப்பதற்கு முன்பாகவே கூறிவிடுகிறேன்.. இந்திய அணி நிச்சயம் வெல்லாது. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது. இந்தியா ஜெய்க்காது என்று சொல்லிவிட்டேன். அதனால் இனி இந்திய அணி வெல்லப் போவதில்லை. நீங்கள் என்ன கடவுளை விட பெரியவரா? என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஐஐடி பாபாவின் பதில் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐஐடி பாபா என்கிற அபே சிங் மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கனடாவில் பணியாற்றி வந்தவர். திடீரென மிகப்பெரிய ஊதியம் பெற்று வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு பாபாவாக மாறியவர். இந்நிலையில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று ஐஐடி பாபா கூறிய நிலையில், சேஸிங்கில் கிங் விராட் கோலி முன் நின்று சதம் விளாசினார். இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐஐடி பாபாவை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர். மகா கும்பமேளாவில் நீராடினோமா, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி கிரிக்கெட் பக்கம் வந்து அவமானப்பட வேண்டும் என்று ஐஐடி பாபாவை ரசிகர்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.