அமைதிப்படை ‘அமாவாசை’ யார்..!?

தமிழக அரசியல் களத்தில் கொங்கு மண்டலம் ஒரு தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாகும். கொங்கு தொகுதிகளின் வெற்றி, தோல்விகளின்  எண்ணிக்கையை பொறுத்தே ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும் . ஆகையால், MGR -ரின் காலம் தொட்டே  அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம் கலைஞரின் காலம் வரை ஒரு கனவாகவே இருந்து வந்த  நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து தமிழக பாஜக எல். முருகன் மாநில தலைவராக நியமனம். அவரை தொடர்ந்து அண்ணாமலை நியமனம் என கொங்கு மண்டல அரசியல் களம் சூடிப்பிக்கத் தொடங்கியபோது 2018 டிசம்பர் 14 -ஆம் தேதி மீண்டும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் செந்தில் பாலாஜி சூறாவளி சுற்று பயணம் மேற்கொண்டு பாஜக, அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை ஒட்டுமொத்தமாக சிதறடித்து ஒட்டுமொத்த கொங்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்தது மட்டுமின்றி கரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனக்குள்ள செல்வாக்கை  செந்தில் பாலாஜி நிரூபித்தார். தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கோயம்புத்தூர் உட்பட அநேகமான பகுதிகளில் அமோக வெற்றி பெற்ற, அதிமுகவின் கோட்டையான கோயம்புத்தூரை தகர்த்து விட்டோம் எனச் சூளுரைத்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோது தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது என்றால் அவர் எந்த அளவிற்கு மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்தார் என்பதைக் காட்டுகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கருது வேறுபாடு ஏற்பட்டபோது ஏற்பட்ட கருத்து மோதலில் உனக்கு முன்னாள் நான் அதிமுகவில் எம்எல்ஏ ஆனவன் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, நீ எனக்கு முன்னாள் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தாலும் நீயும் நானும் ஒரே நேரத்தில் தான் அமைச்சர்கள் ஆனோன் என செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து எடப்பாடி பழனிசாமியின் வாயடைத்தார் .

இதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் கொடுக்க செந்தில் பாலாஜியின் அரசியல் பயணம் அசுர வளர்ச்சி அடைந்தது. ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தையே தான் கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்குவங்கியை சிந்தாமல் சிதறாமல் திமுக பக்கம் திரும்பியது. இதுமட்டுமின்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் விமர்சனங்களுக்கு செந்தில் பாலாஜி ஒருவரே தக்க பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தல் இரண்டு முக்கிய ஆளுமைகளான மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தலை நாடே உற்று நோக்க ஆரம்பித்தது. இதில் ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களை வென்றது, இதில் அதிமுக 65 இடங்களை மட்டும்  கைப்பற்றியது.

மு. க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியது. இவற்றில் திமுக 125 தொகுதிகளில் கைப்பற்றியது. இதன் மூலம் அதிமுகவின் பத்தாண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க மு. க. ஸ்டாலின் அறுதிப் பெரும்பான்மையோடு முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சரானார். இந்த வெற்றிக்கு பின்னால் பலர் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்குகளை சிதைத்து திமுகவின் பக்கம் மக்களை திருப்பியதில் செந்தில் பாலாஜி பங்கு அதிகம் என உணர்ந்த மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது மந்திரி பதவியில் இடமளித்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கோட்டைவிட்டதிற்கு சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜியின் தீவிர பிரசாரமும் ஒரு காரணம் மற்றும் செந்தில் பாலாஜியுடன் ஏற்கனவே இருந்த கருத்து மோதல் இரண்டும் சேர செந்தில் பாலாஜியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி கலைக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சி, ஆட்சி மாறினால், காட்சிகள் மாறும். ஏழு கட்சி மாறியவரின் பேச்சை கேட்டுத்தான் இப்படி செயல்படுகிறீர்கள் என தெரியும். அவர் இப்போது தி.மு.க-வில் இருப்பார். ஆட்சி மாறியவுடன் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள் என செந்தில் பாலாஜியை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில், “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். மேலும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்”என விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக தமது எக்ஸ் பக்கத்தில்,  ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.

பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், இந்த பழனிசாமியின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தமது எக்ஸ் பக்கத்தில், தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் என செந்தில் பாலாஜி மீண்டும் எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வறுத்தெடுத்தார்.