ரிஷப் பந்த்: குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல..! டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது..!

குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது என டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார். IPL 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

ஆனால், டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி IPL 2025 வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இத்தனைத் தொடர்ந்து, டெல்லி கேபிட்டல்ஸ் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது. நான் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ந்துள்ளேன். நான் ஒரு இளைஞனாக டெல்லி அணிக்கு வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

இந்தப் பயணத்தை பயனுள்ளதாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையின் கடினமான ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை அரவணைத்து, என்னை உற்சாகப்படுத்தி, எனக்கு ஆதரவாக நின்றீர்கள். நான் முன்னேறும்போது, உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் சுமக்கிறேன். நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது குடும்பமாக இருப்பதற்கும் இந்தப் பயணத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும் நன்றி” என ரிஷப் பந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.