வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த 632 நாட்களுக்கு பின் முதல் முறையாக வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரசிகர்கள் ரிஷப் பண்ட் பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்ப 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி சதத்தை விளாசி இருக்கிறார்.
ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வந்தாலே, டவுன் தி ட்ராக் வந்து பவுலரின் தலைக்கு மேல் சிக்சர் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அரைசதத்தை 88 பந்துகளில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 36 பந்துகளில் சதத்தை எட்டி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக தமக்கு பிடித்த சென்னையில் சதமடித்து கம்பேக் கொடுத்தது ஸ்பெஷல் என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார். மேலும் 2-வது இன்னிங்ஸில் 30-3 என இந்தியா தடுமாறிய போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததும் ஸ்பெஷல் என தெரிவித்தார். இது பற்றி ரிஷப் பண்ட் பேசுகையில், “இந்த சதம் ஸ்பெஷல். ஏனெனில் நான் சென்னையில் விளையாடுவதை விரும்புகிறேன்” “காயத்திற்கு பின் நான் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன்.
இது டெஸ்ட் ஃபார்மட்டில் காயத்திலிருந்து வந்த பின் அடித்த முதல் சதமாகும். அதை உணர்வுபூர்வமாக கொண்டாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ரன்கள் குவிக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி. மீண்டும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தது உணர்வுபூர்வமாக இருந்தது” என தெரிவித்தார்.