எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்…! இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை..!

அதிமுக சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. இந்த விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அதிமுக ஆட்சியில் இருந்தபோது காவேரி நதி நீர் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பை பாஜக அமல்படுத்த காலம் தாழ்த்தியது. கூட்டணியில் இருந்த அதிமுக 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். காவிரி பிரச்னை குறித்து அம்மா உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தார். அதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆனாலும் ஜெயலலிதாவின் அரசு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் மூலம் வெற்றி பெற்றது.

நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வு விலக்கு என்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழு, செயற்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதிமுக தொண்டர்கள்தான் கட்சி. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என பேசினார். பிறகு அவருக்கு‌ மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் வெள்ளி வீர வாள் மற்றும் நினைவு கேடயம் பரிசாக வழங்கினார்.