Hindenburg Information: சுவிட்சர்லாந்தில் வங்கிக் கணக்கில் அதானி குழுமத்தின் ரூ.2,610 கோடி முடக்கம்

அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து அவ்வப்போது பரபரப்பான தகவல்கள் வெளிவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் அதானி குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய தைவானைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, இந்த கணக்குகளில் ரூ.2,610 கோடி இருந்ததாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டது. இதனால் அதானி பங்குகள் மதிப்பு கடும் சரிவை சந்தித்தன. இதுபோல், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டை இதே நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த வரிசையில், சுவிட்சர்லாந்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடையவரின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.2,610 கோடியை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கோதம் சிட்டி என்ற செய்தி நிறுவனம், சுவிட்சர்லாந்து குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பண பரிவர்த்தனை முறைகேடு மற்றும் பங்கு மோசடிகளில் ஈடுபட்டதற்காக அந்த நாட்டில் உள்ள அதானி குழுமத்தின் பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்குகளில் இருந்த மொத்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2,610 கோடி. கிரிமினல் கோர்ட் உத்தரவுப்படி 2021 -ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து அதானி குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.