Biren Singh: பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசியது தீவிரவாத செயல்..!

மணிப்பூரில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேற்கு இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்ரூக், சேஞ்சம் சிராங் ஆகிய பகுதிகளில் குகி கிளர்ச்சியாளர்கள் 2 ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி பொது மக்கள் நிறைந்த இடத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். அந்த பெண்ணின் 12 வயது மகள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் கொண்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால் கிளர்ச்சியாளர்கள் மீது எதிர்த் தாக்குதலில் ஈடுபட மாநில அரசு காவல்துறை தலைமையகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பிரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், பொது மக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் ட்ரோன்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசுவது தீவிரவாத செயலாகும். இத்தகைய கோழைத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி மக்கள் மீது இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவதை மணிப்பூர் மாநில அரசு மிக தீவிரமாக அணுகும்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அரசு தக்க பதிலடி கொடுக்கும். அனைத்து விதமான வன்முறைகளை நாம் கைவிடுவோம். வெறுப்பு, பிளவு, பிரிவினைக்கு எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றுபடுவோம் என பிரேன் சிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.