பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வரும் நிலையில், போரில் இன்னும் இஸ்ரேல் வெற்றி பெறாத சூழ்நிலையில் இஸ்ரேல் வீரர்கள் காசாவில் போர் புரிய மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் காலம் காலமாக நடந்து வரும் மோதல் காரணத்தால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியது.

இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் மொத்தம் 1,200 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தார். பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதனை கேட்காமல் போரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தமட்டில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்த போரை சாதகமாக வைத்து ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

இத்தகைய சூழலில் தான் காசாவில் போர் புரிய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மறுத்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் என்பது இப்போதைக்கு முடியாது என்பதால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்து போரிட மறுப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, ‛‛காசா மீதான தொடர் போரால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்வதால் அவர்கள் நீண்டகால போரை விரும்பவில்லை” என செய்தி வெளியிட்டுள்ளது.