விண்வெளியில் நடைபயணம்: சாதனை படைத்த முதல் பெண்

சீனா விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. அந்த விண்வெளி நிலையம் 2022-ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா மிகுந்த தீவிரம் காட்டிவருகிறது. இதனைத்தொடர்ந்து ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாய் ஜிகாங், யே குவாங்பு ஆகிய இரு விண்வெளி வீரர்களுடன் வாங் யாப்பிங் என்கிற வீராங்கனையையும் சீனா கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது.

இந்நிலையில் ‘தியான்ஹே’ விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங் விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்டார். இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்த சுமார் 6½ மணி நேரம் விண்வெளி நடை பயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட முதல் சீன பெண் வாங் யாப்பிங் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.