2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வட கொரியா துரிதமாகச் செயல்பட்டு எல்லைகளை மூடி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி மக்களை முடக்கியது. அதன் காரணமாக, 2020-ன் முற்பகுதியில் வட கொரியா கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையைச் சிரமமின்றி சமாளித்தது.
ஆனால், 2020-ன் பிற்பகுதியில் கிம் ஜாங் உன்-னின் தற்காப்பு நடவடிக்கைகளை மீறி நோய்த்தொற்று பரவல் வட கொரியாவில் தீவிரமடைந்தது. அதன் விளைவாக, வட கொரிய அரசு பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது, விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவது மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிப்பது எனக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணத்தால் வட கொரியா வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஏற்கனவே, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நிலைகுலைந்து நின்ற அந்நாடு கூடுதலாக இயற்கை பேரிடர் மற்றும் பொருளாதார பாதிப்பால் கலங்கிப்போனது. அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட கொரியாவில் கடும் பட்டினியும் பஞ்சமும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணுசக்தி திட்டத்தின் காரணமாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசமாகி விட்டதாலும் தற்போது அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் கடும் தட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பொதுவெளியில் தலைகாட்டத் துவங்கியிருக்கும் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு உயர் மட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடுமையாக குற்றம்சாட்டினார். வெறும் எச்சரிக்கையோடு விட்டுவிடாமல் மக்களின் பசிக்கும், பட்டினிக்கும், கொரோனா உயிரிழப்புகளுக்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன.