யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுக்க …! மீண்டும் துடைப்பத்தை கையிலெடுத்த பிரியங்கா காந்தி…!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து இருந்தார்.”மக்கள் அவர்களை இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்வது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை” என கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று தலித்துகள் வசிக்கு காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, “இப்படி விமரிசித்து அவர் என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப் படுத்தியுள்ளார்.

உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்” என தெரிவித்தார்.