மு.க. ஸ்டாலின் பதிலடி: எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும்.. சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது..!

எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவை பயிற்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நேற்றைய முன்தினம் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசுகையில், “சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது. அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி உள்ளது. அது நீதித்துறையிடம் எப்போதும் இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

நாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? இதில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா, இல்லையா? என்பதற்கான கேள்வி அல்ல. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது. என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தை பார்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்தியாவில் குடியரத் தலைவர் என்பது மிகவும் உயர்ந்த ஒரு பதவி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், பராமரிப்பதாகவும் கூறி அவர் பதவியேற்று உள்ளார். துணை குடியரசுத் தலைவர், அமைச்சரகள் உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் நீதிபதிகள், அந்த அரசியல் சாசனத்துக்கு அடிபணிவதாக உறுதியேற்று பதவி ஏற்கிறார்கள். ஐந்து நீதிபதிகள் எந்த அடிப்படையிலும் குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்தும் நிலை இருக்கக்கூடாது. அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே ஆகும். அதுவும் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதில் இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் செயல்முறையில் பொறுப்புக்கூறல் கொள்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஆனால் நீதித்துறையால் நிர்வாகம் நடத்தப்படுமானால், நீங்கள் எப்படி கேள்விகள் கேட்பீர்கள்? தேர்தல்களில் யாரை நீங்கள் பொறுப்பேற்க வைப்பீர்கள்? நல்லது கிடையாது நமது மூன்று நிறுவனங்களான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்பு மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்று மற்றொன்றின் களத்தில் ஊடுருவினால் அது ஒரு சவாலை ஏற்படுத்தும். அது நல்லது கிடையாது” என துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆவேசமாக பேசி இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சனம் செய்ததற்கு பதில் அளிக்கும் வகையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில செய்திதாளில் தலையங்கத்தில் பாராட்டி பத்திரிக்கையாளர் ராஜ்தீப் தர்சாய் கருத்துக்களை கூறி இருந்தார். இதை ரீடுவீட் செய்திருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துககு பதிலடி தரும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நம் நாடு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், வலதுசாரி கதைகளை பொது விவாதத்தில் புகுத்தவும் ஆளுநர்கள், துணை குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசியலமைப்பு அலுவலகங்ள் அரசியல் மயமாக்கப்படுவது அதிகரித்துவிட்டது.

ஒரு ஜனநாயகத்தில், அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும், சம்பிரதாயபூர்வமாக நியமிக்கப்படுபவர்களால் அல்ல. யாரும், எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது. இதையே நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும்.

எனவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே! என மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.