குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் காவல்துறையினரின் சாதனையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மக்களின் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் காவல்துறை பல நேரங்களில் மக்களின் நண்பனாக நடந்துகொள்வதும் இல்லை.
மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறை அவ்வப்போது தரம் தாழ்ந்த செயல்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். “நெல்லில் பதர் போல” குற்ற செயல்களை தடுக்கும் காவல்துறை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது மக்களுக்கு காவல்துறையினர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் கொண்டுள்ளது.
வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் காவல்துறையினரே கைது செய்யப்படுவது மிகவும் வேதனையான ஒன்றாகும். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சக காவல்துறையினருடன் இணைந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு சொத்துகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து இருப்பது காவல்துறையினர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சிதைத்து விட்டது வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் தனது நண்பர் மூலம் தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் இயந்திரம் வாங்கி ரூ.20 லட்சம் பணத்துடன் சென்றார்.
அப்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், முகமது கவுஸை வழிமறித்து இது ஹவாலா பணமா என கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களின்படி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, இந்த மோசடிக்கு பின்னணியில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சன்னி லாய்டு செயல்பட்டது தெரியவந்தது. உடனே காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, தலைமறைவாகியிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு தனது நண்பர்கள் உதவியுடன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் டேராடூன் சென்று கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, சன்னி லாய்டு பூக்கடை மற்றும் திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் காவல் நிலையங்களில் பணியாற்றிய போது, ஹவாலா மோசடி நபர்களை குறிவைத்து சக நண்பரான சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறி மற்றும் தங்கம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதுபோன்ற வழிப்பறியில் சம்பாதித்த பணத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு ஜாம்பஜாரில் குளிரூட்டப்பட்ட அதி நவீன உடற்பயிற்சி மையம், கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்புள்ள ரிசார்ட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல கோடிக்கு சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது.
அதேநேரம் சன்னி லாய்டு பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சொத்துகளை முடக்க சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சன்னி லாய்டு வாங்கி குவித்து வைத்துள்ள சொத்து விவரங்களை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். சன்னி லாய்டு கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரால் பாதிக்கப்பட்டும், பணத்தை இழந்த நபர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் தொடர் புகார்கள் அளித்து வருகின்றனர்.
தம்மால் முடிந்தவரை ஊரை அடித்து உலையில் போடும் சன்னி லாய்டு போன்றவர்களால் காவல்துறைக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு இணையானது நமது தமிழகக் காவல்துறை என மார்தட்டிக் கொள்ளும் நாம் அந்தப் பெருமையையும், காவல்துறை மக்களின் நண்பன் என்ற பெயரையும் தமிழகக் காவல்துறை மீட்டெடுக்கப்போவது எப்போது..!?