சென்னையில் “அகத்திய முனிவர் நடைபயணம்”என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி’ என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.வி.எம்.பி.எழிலரசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது மத்திய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜக அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு தற்போது ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள மத்திய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் தமிழகத்தில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்துக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என சி.வி.எம்.பி. எழிலரசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.