திரும்பும் திசையெல்லாம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பன தொடர் கதையாக மாறியிருப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. குறிப்பாக விவசாயிகளின் ஆடு, மாடுகளை களவாடும் ஒரு கூட்டம் இன்று காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்யும் அளவிற்கு மாறியுள்ளது மிகுந்த வேதனையான விஷயமாகும்.
காவல் உதவி ஆய்வாளரை கொலை வழக்கில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 10, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரையும் தனிப்படை காவல்துறை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தைவெளியைச் சேர்ந்த எஸ். பூமிநாதன் என்பவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி – ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
இவருடன் ஏட்டு சித்திரைவேல் என்பவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ஈடுபட்டிருந்தபோது இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்திய போது, அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால், உஷாரான சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.n இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களை பின் தொடர்ந்த சென்ற சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் ஏட்டு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்ல முடியவில்லை. ஆனால் சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். இந்நிலையில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு உட்பட கீரனூரை அடுத்த களமாவூர் ரெயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார்.
அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் தப்பி சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்து சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பூமிநாதன் நவலூர் காவல் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொருஉதவி – ஆய்வாளரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். இதனால், பல நாட்கள் ஆடுகளை திருடி ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் வருமானம் வந்த கும்பல் தாங்கள் மாட்டிக்கொண்டால் வெளியுலகிற்கு தெரிந்துவிடும் என்ற எண்ணத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.
இதில், படுகாயம் அடைந்த பூமிநாதன் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைத்து சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், சிறப்பு உதவி – ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை காவல்துறை அதிரடியாக கைது செய்தனர்.