ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார்.
20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளது.