அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என கூறிய ரஜினிகாந்த் போயஸ் கார்டன் ஜெ. இல்லத்தில் அஞ்சலி செலுத்தி அளித்த பேட்டி, தமிழக அரசின் சார்பில் மரியாதை, அதிமுகவின் பிரம்மாண்ட கொண்டாட்டம், அதிமுக உரிமை மீட்புக் குழு, அமமுக, இப்போது செங்கோட்டையன் என அதிமுகவின் அவதாரங்களாக புதிது புதிதாக உதயமாகும் பல்வேறு தரப்பினரின் பெருமிதப் பேச்சுகள் பிப்ரவரி 24 முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த தினம். இன்னும் கட்சி கடந்தும், துறைகள் கடந்தும் பதிவாகும் ஜெயலலிதாவுக்கான புகழஞ்சலிகளும், சமூக வலைதள விதந்தோதலும், விமர்சனங்களும் ஜெயலலிதா இன்னமும் தமிழக அரசியலில் நினைவுகளால் நிலைத்து இருக்கிறார் என்றே தோன்றுகின்றது .
“எனக்கு உண்மையான அன்பு கிடைத்ததில்லை, நிபந்தனையற்ற அன்பை நான் என்றுமே பெற்றதில்லை”… என தமிழகத்தின் உச்சத்தில் இருந்த ஒருவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள். சர்ச் பார்க் கான்வென்ட் படித்து, திரையுலகில் நிகரில்லா நடிகை, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் கட்டியவர், தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவர். மாநில உரிமைக்காக குரல் கொடுத்த போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர்.
இந்திய அரசியல் களத்தில் எதற்கும் அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்த இரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரைவிட அதிமுகவை அதிக தேர்தல்களிலும், அதிக தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற வைத்தவர். அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாகவும் வாக்கு வங்கியில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் அதிமுகவை மாற்றியவர்.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்களுக்காக இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக்காகவும் எப்பொழுதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்த ஒரு ஒப்பற்ற தலைவர்.
கடந்த 2016 டிசம்பர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி. ஆர், தனக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவ்வாறே. அவருக்குப் பிறகு கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஓபிஎஸ் கைகளுக்கு முதலமைச்சர் பதவிச் சென்றாலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக ஜெயலலிதா எப்போதும் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கேள்விக் குறியாக்கியது.
ஓபிஎஸ் நீக்கம், இரு அணிகள் உருவாக்கம், இபிஎஸ்-க்கு முதலமைச்சர் பதவி, வி.கே. சசிகலா சிறைவாசம், மீண்டும் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு என அதிமுகவில் வரிசைகட்டியது சலசலப்புகள். அதிமுக சற்றே மீண்டெழத் தொடங்கிய வேளையில் மீண்டும் அதிகாரப் பகிர்வில் சர்ச்சை ஏற்பட்டு இபிஎஸ் – ஓபிஎஸ் பிரிவினை, அதிமுக அலுவலகம் சூற என பல பிரச்சினைகள் என ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மறைந்து கேலிக்கூத்தானது.
2024 பிப்ரவரியில் பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அந்த மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல, எம்ஜிஆர் போலவே ஆட்சியை ஜெயலலிதா தந்தவர். தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் ஜெயலலிதா வாழ்ந்தவன் என நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
மேலும், கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி தீவிர இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் களைகட்டியிருந்த நேரத்தில் கோயம்புத்தூரில் பிரதானப் பகுதியில் மாலை நேரத்தில் பெரும்பாலோனோரின் கைகளிலும் ஜெலலலிதா, எம்ஜிஆர் பதாகைகள் அதிமுக பிரச்சாரம் போல என நினைத்திருந்த அங்கு திடீரென வந்த அண்ணாமலை காரிலிருந்து இறங்கிவந்து பிரச்சாரம் மேற்கொண்டபோதும் தான் அது பாஜகவின் பிரச்சாரம் என்று புரிந்தது.
இந்த இரண்டுமே தமிழக மக்களின் மனங்களில் இடம்பெற ஜெயலலிதா என்ற அடையாள பிம்பத்தையே அதிமுகவிடமிருந்து கைப்பற்ற பாஜக கையிலெடுத்த உத்தியாகும். அதேபோல் தமிழக அரசியல் களத்திலும் புதுப்புது கூட்டணிகள், அதிமுக என்றால் ஜெயலலிதா என்ற பிம்பத்தை உடைக்க கட்சிக்குள்ளேயே முயற்சி என்ற குற்றச்சாட்டு என பல்வேறு போக்குகள் உருவாகி இருந்தது.
2014 மக்களவைத் தேர்தலின் போது நாடெங்கிலும் “மோடி, மோடி” எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில் தமிழகத்தில் “மோடியா, இந்த லேடியா?” என்று நேரடியாக ஜெயலலிதா சவால் விட்டவர். ஆனால் அவரையே தனக்கான அரசியல் பக்கபலமாக தூக்கிக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் பாஜக இறங்கியது. அதிமுக வலுவிழந்து சின்னத்துக்கும், கட்சிக்கும், பதவிக்கும் அடித்துக் கொள்ளும் அடுத்தடுத்த முகங்கள். இதற்கிடையில், அதிமுக அனுதாபிகளுக்கு அல்லது அதிமுக பூசல்களால் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்தவர்களுக்கு, “எம்ஜிஆர், ஜெயலலிதா துணை” என்று தேர்தல் அரசியலுக்கு பாஜக பிள்ளையார் சுழிபோட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில். ஒரு தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிக்கு வலுவான தலைமை இல்லாமல் போனபோது, உட்கட்சிப் பூசல்கள் மிகுந்த அந்தக் கட்சியின் அந்தஸ்தை வெளியில் இருந்து வரும் இன்னொரு கட்சி வெகு சுலபமாக ஸ்வீகரித்துக் கொண்ட பாஜக பலனை ஓரளவுக்கு அறுவடை செய்தது. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் ‘இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று அடித்துக் கூறி அதையே மக்களின் மனங்களில் நிறுவ முயன்றார்.
இந்திய அரசியலுக்கு கூட்டாட்சிதான் ஆன்மா என்றால், அந்த ஆன்மாவை உயிர்ப்புடன் வைப்பவை பலம் பொருந்திய மாநிலக் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. தேசிய அளவில் ஒரு வலுவான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்கு வலுவான மாநிலக் கட்சிகளின் துணை தேவை என்ற நிலையே இருந்தது. 2014-ல் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பின்னர் மாநிலத்தில் பிரச்சினையின்றி ஆட்சி செய்ய வேண்டும் என்றால் மத்தியில் இருக்கும் அரசுக்கு ஜால்ரா’ போட வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. அதை பாஜகவே நீடித்த வளர்ச்சிக்கு ‘இரட்டை இன்ஜின்’ அரசை தேர்வு செய்யுங்கள் என்று மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறது. அப்படி இல்லாத மாநில அரசுகள் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.
தன் மீதான பல்வேறு வழக்கு நெருக்கடிகள் இருந்தாலும் கூட ஜெயலலிதா மத்தியில் இருந்த அரசுக்கு எதிர்ப்பு காட்ட சற்றும் தயங்காமல் இயங்க முடிந்தது. அண்ணா, கருணாநிதி என எல்லோரும் மாநில உரிமைகளுக்காக முழங்கியவர்கள்தான். அந்த வரிசையில் எந்த இடத்திலும் மாநில உரிமைக்காக வலுவான குரல் ஜெயலலிதா கொடுத்தவர். தனது அரசியல் குருவான எம்ஜிஆரையும் மிஞ்சி சமரசமின்றி துணிச்சலான முடிவுகளை எடுத்து மத்தியில் இருப்பவர்களை திக்குமுக்காட ஜெயலலிதா வைத்தவர்.
இரட்டை இன்ஜின் அரசு என்று புதுவித அரசியல் போக்கை பாஜக புகுத்தி வரும் சூழலில், ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாமல் போனது தமிழக அரசியல் களத்தில் பாஜக தன்னையும் முக்கிய கட்சியாக உருவாகிக் கொள்ள ஒரு மிகப் பெரிய களத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்தப் போக்கு தமிழக அரசியலில் வழக்கொழிந்ததுபோல் இருக்கிறது.
அதிமுக மாநில அரசியலில் பிழைத்திருக்க ஒற்றைத் தலைமையோ இரட்டைத் தலைமயோ உள்கட்சிப் பூசல்களோ எதுவாயினும் பிளவுபடாமல் எதிர்கொள்ள வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததாலும் அவர் தனக்குப் பின்னர் எம்.ஜி. ஆரைப் போல இவர் தான் அரசியல் வாரிசு என்று அடையாளப்படுத்தி, வளர்க்காது அனைவரையும் கட்டளைகளுக்குப் பணிபவர்களாகவே மட்டுமே பழக்கியதாலும் நேர்ந்த விணை இதுவாகும்.
தன் கலையுலக வாரிசாக பாக்யராஜை சுட்டிக்காட்டி இருந்த எம்ஜிஆர் அவர்கள் மறைவுக்குப் பின் உருவான வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஆகவே, எம்ஜிஆரின் இடம் எனக்குத்தான் என்று கட்சிக்குள் பலரும் கனவுக்கோட்டை எழுப்பிக் கொண்டு இருந்தனர். 17 டிசம்பர் 1988-ல் இரட்டை இலையை முடக்கி ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம். ஜானகிக்கு ஜோடிப் புறாவும் தேர்தல் ஆணையம் வழங்கியது.
ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டும் வெற்றி பெற ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைக்க திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பிரிந்துகிடந்தால் லாபமில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியத்தின் விளைவு, பொதுவாழ்வில் இருந்து ஜானகி விலக ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகி இரட்டை இலை மீட்டு எடுத்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இயங்கவே முடியாது என்று ஆரூடங்கள் சொல்லப்பட்ட நிலையில், உருக்குலைந்துபோன கட்சியை ஆளுங்கட்சி என்ற உச்சாணிக் கொம்பில் ஜெயலலிதா உட்கார வைத்தார்.
தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்திய ஜெயலலிதா எனும் ஆளுமையை தமிழக அரசியலும், அதிமுக கட்சியும் மிஸ் செய்கிறது என்பது உண்மைதான். இந்தச் சூழலில் இன்றைய அரசியல் களம் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக தத்தளித்து கொண்டுள்ளதா..!? அல்ல அதிமுகவினர் ஒன்றுபட்டு “எம்ஜிஆர், ஜெயலலிதா துணை” என்று தேர்தல் அரசியலுக்கு பாஜக பிள்ளையார் சுழிபோட்டு 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை அறுவடை செய்தது மட்டுமின்றி இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று அடித்துக் கூறிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஓட விடப்போரார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.