ஜெயக்குமார் வேதனை: தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள்!

தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி. அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு சென்று மதன் குமார் பெண் கேட்டுள்ளார்.

ஆனால் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் மதன் குமாருக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் இன்று காலை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை!

தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள்!

தந்தையும்-மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டியிருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழுமா?

இதன் பிறகு ’இது என் ஏரியா?’ என சினிமா நடிகர் போல வசனம் பேசி விளக்கம் அளிக்க Unfit அமைச்சர் அன்பில் மகேசை அனுப்பினால் ஆசிரியரின் உயிர் திரும்பி வந்து விடுமா?

ஒரு குடும்பம் கொள்ளையடிக்க தமிழ்நாடு தினந்தினம் நிர்வாக சீர்கேட்டால் சீரழிகிறது! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது எள்ளளவும் இல்லை! என ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.