ஜிஎஸ்டியால் “பன் மட்டுமல்ல பனியன்” தொழிலும் பாதிப்பு..!

சிறு குறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 7 ஆண்டுகளாகியும் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

1925-ஆம் ஆண்டு விவசாயத்திற்கு அடுத்தபடியாக திருப்பூரில் தொடங்கிய பனியன் உற்பத்தி தொழிலானது திருப்பூர் மக்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக வளர்ந்து இன்று வானோக்கி நின்றது. 1980-ஆம் ஆண்டு ரூ.50 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்த திருப்பூர் கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியும், ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு வருடந்தோறும் வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக சரிவை சந்தித்தது.

தற்போது, சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும்கூட பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் இன்னும் பின்னலாடை துறையினருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. அதில் ஒன்றுதான் ஜிஎஸ்டி. பாஜக அரசு முதல் முறையாக பொறுப்பேற்றபோது 2017 ஜூன் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தப்படும்போது குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ் நல்ல எளிமையான வரி என விளம்பரப்படுத்தியது. ஆனால், அறிமுகப்படுத்தப்படும்போது இதனை புரிந்து கொள்வதற்கும், இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் கால அவகாசம் வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தி இருந்தனர். இருப்பினும் அதற்கு செவி சாய்க்காமல் அதிரடியாக ஜிஎஸ்டியை மத்திய அரசு அமல்படுத்தியது.

இதன் காரணமாக 7 ஆண்டுகளாகியும் ஜிஎஸ்டியின் தாக்கம் இன்னும் தொழில் துறையை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இதற்கு சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் முன்னிலையில் கோவையில் நடந்த தனியார் உணவக உரிமையாளர் பேசிய கிரீம் பன் விவகாரம் ஒரு உதாரணம். ஜிஎஸ்டியின் பாதிப்புகள் பனியன் தொழிலையும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள். திருப்பூருக்கு பின்னலாடை துறை என்பது கடந்த காலங்களில் தொழிலாளர்களாக இருந்தவர்களை முதலாளிகளாக்கி அழகு பார்த்தது. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின்பு முதலாளிகளை கூட தொழிலாளிகளாக மாற்றி இருப்பதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு கார்ப்பரேட் ஆர்டர்களை பெற்று நடத்தும் சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை ஓரளவு சமாளித்து வெற்றி கண்டு இருந்தாலும்கூட, உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய ஏராளமான சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே ஏராளமான சிறு குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. செயல்பட்ட நிறுவனங்களும் ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறையினை எளிமைப்படுத்த வேண்டும் என அமல்படுத்துவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட கூட்டத்தில் திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சந்திப்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆறுதலான எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இது குறித்து பவர் டேபிள் உரிமையாளர் சங்கத் தலைவர் நந்தகோபால் பேசுகையில், ‘‘ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும்போது அதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரியப்படுத்தினோம். ஆனால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதன் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இன்னும்கூட நீடிக்கிறது. திருப்பூரில் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்கள் பருத்தியிலிருந்து பின்னலாடை உற்பத்திக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதற்கான ஜிஎஸ்டி என்பது ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும். இதற்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறதே தவிர அதற்குண்டான செலவினங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.

இது சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி எனப்படும் நிலையில் பட்டன், ஜிப், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் பாலி பேக், எலாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும் மேலும் சில பொருட்களுக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது இயந்திரங்கள், இயந்திரங்களுக்கான ஸ்பேர் பொருட்கள் என அதிக ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது.

இது போக சரக்குகளை அனுப்புவதற்கு, கொரியர் செய்வதற்கு, இயந்திரங்கள் சர்வீஸ் உள்ளிட்ட அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. இதில், ஏதேனும் சிறு குறைபாடு நேர்ந்தாலும்கூட அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது’’ என நந்தகோபால் தெரிவித்தார்.

திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி என்பது பருத்தியிலிருந்து நூல் உருவாக்கப்பட்டு, நூலில் இருந்து துணியாக்கப்பட்டு, அதற்குப் பின் டையிங், கட்டிங், டெய்லரிங், செக்கிங், பேக்கிங் என பல நிலைகளை கடந்து வருகிறது. ஒவ்வொரு நிலைக்குமான ஜிஎஸ்டி என்பது சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்றாக உள்ளது.

எனவே, இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஜிஎஸ்டி சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், ஜிஎஸ்டி வரி செலுத்தும்போது சிறு தவறுக்கும் கூட அதிக அபராதம் விதிக்கப்படுவதை கைவிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.