தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தொடக்கமாக கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
மேலும் நேற்று 2-வது நாளாக கள ஆய்வில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோயம்புத்தூர் காந்திபுரத்திலுள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கோயம்புத்தூரில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோயம்புத்தூருக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.
கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்யச் செல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோயம்புத்தூரில் இருந்து துவங்கியுள்ளேன்.
நேற்று முதல் கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார். செந்தில் பாலாஜி கோயம்புத்தூரின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். மீண்டும் அதே உத்வேகத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, செந்தில்பாலாஜியை பாராட்டினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன். முதலமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.