இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. தொடர்ந்து மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதுமே தண்ணீர் தேங்கும் அரங்கநாதன் சுரங்கப்பாதை, வியாசர்பாடி, மேட்லி சுரங்கப்பாதை, ராயபுரம், ரங்கராஜபுரம். திருவொற்றியூர், மாணிக்கம் நகர், கணேஷபுரம் உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகள் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகையால், சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளர்.