நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை, அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையினரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் காவல்துறை ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது காவல்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியை நீட்டிய காவலாளி அப்போது காவல்துறையினரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.