கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 4-வது முறையாக கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1000-த்திற்கும் அதிகமான காளைகள், 750-த்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். கொரோனா சான்றிதழ் வைத்திருந்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக களத்திற்கு வந்தது. அதனை பிடிக்க கூடாது என அறிவிக்கப்படவே மாடுபிடி வீரர்கள் ஓரமாக நின்றனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு விளையாட்டு காட்டியது. அதனை அடக்க முயன்ற வீரர்களையும் தூக்கி பந்தாடியது. ஒரு சில காளைகளை வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர்.
போட்டியில் வென்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடு பிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு மாருதி கார்கள் பரிசாக வழங்கப்படுகிறது.