சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 256 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,791ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.
இதேபோன்று ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வுகான் நகர குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவில் உள்ள தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகங்கள், தொடர்பு மையங்கள்,ஸ்டோர்ஸ் ஆகியவற்றை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தனது நிறுவனத்தின் மையங்கள் மூடியிருக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.